ஊதியக் குழு முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி ஜாக்டோ ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் தகவல்


ஊதியக் குழு முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி ஜாக்டோ ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் தகவல் | அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்ததாக ஜாக்டோ-ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜன் தெரிவித்தார். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கிரப் சார்பில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அப்போது, முதல்வர் தங்களை அழைத்து பேச வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை ஜாக்டோ-ஜியோ கிரப் நிர்வாகிகள் ஒருங்கிமைப்பாளர் சண்முகராஜன் தலைமையில் நேற்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் சண்முகராஜன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். அப்போது, ஆளுநர் அறிவுரைப்படி பிப்ரவரி இறுதிக்குள் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். அதிகாரிகளுடன் ஆலோசித்து ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிடுவதாகவும் முதல்வர் உறுதி அளித்தார். இவ்வாறு சண்முகராஜன் கூறினார்.

Comments