Featured Post

இந்தியை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்வு எழுத விலக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


இந்தியை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்வு எழுத விலக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு | இந்தியை மொழிப்பாடமாக படித்துவரும் 24 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்வு எழுத விலக்கு அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், ராயபுரம் ஜி.கே.ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் படித்துவரும் 24 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுவில், "நாங்கள், இந்த பள்ளியில் 6-ம் வகுப்பில் இருந்து படித்து வருகிறோம். எங்களது மொழிப்பாடம் இந்தி. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத உள்ளோம். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் என்று அரசு தேர்வுத்துறை கடந்த நவம்பர் 7-ந் தேதி அறிவித்தது. எங்களுக்கு தமிழ் மொழி தெரியாது. இனிமேல் தமிழ் மொழியை படித்து தேர்வு எழுதுவதும் இயலாத காரியம். எனவே, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடத்தேர்வு எழுதுவதில் இருந்து எங்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்தின் கீழ் தமிழ் கட்டாயப்பாடம் என்பதால் இந்த மாணவர்களுக்கு தமிழ் பாடத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- தமிழ் பாடம் கட்டாயம் என்று கொண்டு வரப்படும்போது, முதல் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு தமிழை கற்பிக்க வேண்டும். இடைப்பட்ட வகுப்புகளில் தமிழ் பாடத்தை கற்பிக்கத் தொடங்கினால் அவர்களால் தமிழை முழுமையாக கற்க முடியாது. முதல் வகுப்பில் சேரும்போதே தமிழ்பாடம் கட்டாயம் என்று அறிவித்து இருந்தால் இந்த மாணவர்கள் தமிழ்மொழியை கற்றிருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் இடைப்பட்ட வகுப்புகளில் படித்து கொண்டிருக்கும்போது தமிழ் மொழி கட்டாயம் என்று அறிவிக்கும்போது அவர்களால் தமிழ்பாடத்தேர்வை எழுத முடியாது. எனவே, மாணவர்கள் 24 பேருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Comments