Featured Post

தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு | தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த, மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் கே.ஹக்கீம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக நீதிபதி எம்.சிங்காரவேலு இருந்தார். அப்போது 2017-2018 கல்வி ஆண்டுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு முதல் 2021 வரை கல்வி ஆண்டுகளுக்கான கட்டணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணம் இன்னும் அறிவிக்கப்படாததால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களிடம் இஷ்டத்துக்கு கட்டணம் வசூல் செய்வதில் ஈடுபட்டு வருகின்றன. இதில் வெளிப்படைத்தன்மையை பள்ளி நிர்வாகங்கள் கடைபிடிப்பதில்லை. எனவே 2018 முதல் 2021 வரை கல்வி கட்டணம் அறிவிக்கும்வரை தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும். கல்வி கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்க தனியார் பள்ளி கல்வி கட்டண குழுவுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழகத்தில் 10 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 5 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார். விசாரணை முடிவில், தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து ஏப்ரல் 30-ந் தேதிக்குள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments