மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு விவகாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அரசு டாக்டர்கள் முடிவு

மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக, தமிழக அரசு டாக்டர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ) சார்பில் சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் டாக்டர்கள் சாமிநாதன், கார்த்திகேயன், பெருமாள் பிள்ளை ஆகிய 3 பேர் மட்டும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல்நிலை மோசமடைந்த கார்த்திகேயன், பெருமாள் பிள்ளை ஆகியோர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் நேற்று மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மருத்துவக் கல்லூரி யில் (எம்எம்சி) நடந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். 8 வாரத்துக்குள் இதற்கிடையில் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். 8 வாரத்துக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென அரசு டாக்டர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

Comments